வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் இன்று சட்டோகிராமில் காலை 9 மணிக்கு துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 22 ரன்களிலும் சுப்மன் கில் 20 ரன்களிலும் வெளியேறினர். பின் வந்த புஜாரா நிலைத்து நின்று ஆட ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது. இதனிடையே விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சீராக ரன்களை சேர்த்தது. ரிஷப் பண்ட் அதிவேகமாக 46 ரன்களை அடித்து வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 261 ஆக இருந்தபோது புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த அக்ஸர் படேல் முதல் நாளின் இறுதிப் பந்தில் 14 ரன்களில் வெளியேற முதல் நாள் முடிவில் இந்திய அணி 278 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
வங்கதேச அணியில் டைஜுல் 3 விக்கெட்களையும் ஹாசன் மிராஸ் 2 விக்கெட்களையும் கலீத் அஹமத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.