இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் இன்று (13.02.2021) தொடங்கியது. இப்போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அக்ஸர் படேலும், ஷாபஸ் நதீம் நீக்கப்பட்டு குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டனர். ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, சிராஜ் சேர்க்கப்பட்டார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ரோகித்தும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் டக் - அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மறுபக்கம் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியில் ஆடுவது போல அதிரடியாக ஆடினார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. அதேநேரத்தில், புஜாரா 21 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து உணவு இடைவேளையில் இந்திய அணி 103 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோகித் சர்மா 78 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.