Skip to main content

மைதானத்தில் வெடித்த சர்ச்சை... விளையாடுவதை நிறுத்திய இந்திய அணி!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

india vs  australia 3rd test match Sidney

இந்தியா வெற்றிப் பெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. 

 

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. இதனால் இந்திய அணி வெற்றிப் பெற 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது இந்திய அணி. 

 

இதனிடையே, சிட்னியில் இனவெறி சர்ச்சையால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த பும்ரா, முகமது சிராஜை ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதேபோல் நான்காவது நாள் ஆட்டத்திலும் இனவெறி தூண்டும் வகையில் சில ரசிகர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் கவனத்தை ஈர்க்கும் வகையில் திடீரென பந்து வீச்சை நிறுத்தினார். முகமது சிராஜிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரஹானே நடுவர்களிடம் பிரச்சனையைக் கொண்டு சென்றார். அதைத் தொடர்ந்து இனவெறி தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேர் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

 

இது குறித்து விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், "இனவெறி தூண்டும் வகையில் செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.