இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 325 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களுக்கு சுருண்டது. இதன்பின்னர் ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி, 276 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதன் காரணமாக 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய (05.12.2021) ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்தநிலையில், இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி, 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ரன்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 14வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.