ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை, வாழ்வா சாவா என்ற நிலையில் விளையாடினேன் என ஹைதராபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
13 - ஆவது ஐ.பி.எல் தொடரின் 40 - ஆவது லீக் போட்டியில், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி வீரரான விஜய் சங்கர், அரைசதம் விளாசினார். மேலும், மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.
போட்டிக்குப் பின் பேசிய விஜய் சங்கர், "வாழ்வா சாவா என்ற நிலையில்தான் இந்தப் போட்டியை விளையாடினேன். கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படவில்லை. முன்னர் களமிறங்கிய 3 போட்டிகளிலும் சேர்த்து 18 பந்துகளைத்தான் சந்தித்திருந்தேன். எனவே இந்தப் போட்டி எனக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. முன்வரிசை வீரர்கள் ஆட்டமிழந்ததால், சற்று முன்னதாகவே களமிறங்கும் வாய்ப்பு அமைந்தது. கடந்த போட்டியில் வெற்றியை அருகில் வந்து தவறவிட்டோம். இவ்வெற்றி எங்கள் வீரர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும்" எனக் கூறினார்.