ரோகித் ஷர்மா காயம் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13-ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ரோகித் ஷர்மா வழிநடத்தி வந்த மும்பை அணியை, கடந்த இரு போட்டிகளாக பொல்லார்ட் வழிநடத்தி வருகிறார். ரோகித் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இவ்வருட இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் அணி வீரர்களின் பட்டியலை நேற்று பி.சி.சி.ஐ வெளியிட்டது. அப்பட்டியலில் ரோகித் ஷர்மா பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், ரோகித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை மும்பை அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இது குறித்துப் பேசுகையில், "ரோகித் ஷர்மாவால் மும்பை அணிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட முடிகிறது என்றால், என்ன வகையான காயம் ஏற்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. இதில் சற்று வெளிப்படைத்தன்மை வேண்டும். அவருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகக் கூறுவதுதான் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உள்ளது" எனக் கூறினார்.