20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை இன்று (24/10/2021) எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைத் தொடர்களில் இதுவரை பாகிஸ்தானிடம் தோல்வியே சந்திக்காமல் வலம் வருகிறது இந்திய அணி. தற்போது பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராக இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
20 ஓவர் போட்டிகளுக்கான தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி முடித்த கையோயுடன், உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்குகின்றன இந்திய வீரர்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷண், ரிஷப் பந்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் உள்ளனர். இவர்களில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
புவனேஸ்வர் குமார், ஜஸ்பீரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி ஆகிய பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். இவர்களில் பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்து வீச்சு அமீரக ஆடுகளங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றன.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மிகுந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளனர். குறைந்த ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பார்ப்போம்.
பாகிஸ்தான் அணி உடனான தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்கும் நிலை ரசிகர்களுக்கு ஏற்படுகிது. இதனால், இந்த போட்டிகளை இரு நாட்டு வீரர்களும் கவுரவ பிரச்சனைகளாகவே கருதி களம் காண வேண்டியுள்ளது.
இவ்விரு அணிகளும் மொத்தம் 132 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது. 55 போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. 4 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு காலகட்டம் வரை பாகிஸ்தான் கை சற்று ஓங்கியிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பதிலடி சற்று பலமாகவே உள்ளது.
உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வரலாறு பிரமிக்க செய்கிறது. உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டுள்ள 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல், 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் மோதிய 5 போட்டிகளில், இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த 2007- ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது இந்திய அணி. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவ்விரு அணிகளும் சர்வதேச போட்டியில் களம் கண்டன.
பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா அணி மற்றும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை முக்கிய சுற்றில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.