உலகக் கோப்பை 2023 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், அடுத்த இரண்டு இடங்களை தென் ஆப்பிரிக்க அணியும், ஆஸ்திரேலிய அணியும் தற்போதைய நிலையில் பிடித்துள்ளன. 4 ஆவது இடத்திற்கு, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் தர வரிசைப் பட்டியல் ஐசிசி-ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கில் 830 புள்ளிகள் பெற்று, முதல் முறையாக ஒரு நாள் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2023 இல் இதுவரை 7 சதங்கள், 5 அரை சதங்கள் என 1449 ரன்களுடன் இந்த வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரராக உள்ளார். ஆவரேஜ் 63 ஆகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 41 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். தோனிக்கு அடுத்து குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரரானார். தோனி 38 இன்னிங்ஸ்களில் முதல் ரேங்க் பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது. தற்போதைய தர வரிசைப் பட்டியலில் கில்லுக்கு அடுத்து கோலி 4 ஆவது இடத்தையும், ரோஹித் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசைப் பட்டியலில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 709 புள்ளிகள் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். குல்தீப் 4 ஆவது இடத்தையும், பும்ரா 8 ஆவது இடத்தையும், ஷமி 10 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். லீக் போட்டிகளில் முதலிடம், தற்போது தர வரிசைப் பட்டியலில் முதலிடம் என்று இந்திய வீரர்கள் கலக்கி வருவதால், சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.
-வெ.அருண்குமார்