ஐபிஎல் 2024 போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான 2024 ஆம் ஆண்டின் வீரர்கள் ஏலமானது டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரேட் முறையில் ஒரு புதிய வீரர் இணைந்துள்ளார். ஐபிஎல் இல் டிரேட் எனும் முறை மூலம் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு வீரர்கள் மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் முறையில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணியின் ரோமரியோ ஷெஃபர்ட் வாங்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இவர், வளர்ந்து வரும் ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார். லக்னோ அணிக்காக 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஏலத்தில் எடுக்கப் பட்ட 50 லட்ச ரூபாய் தொகைக்கே மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
இவர் சன் ரைசர்ஸ் அணிக்காக 2022 இல் ஐபிஎல் போட்டிகளில் முதன் முதலில் களம் இறங்கினார். 2023 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு லக்னோ அணியால் டிரேட் செய்யப்பட்டார். தற்போது மும்பை அணியால் டிரேட் செய்யப்பட்டுள்ளார். 28 வயதாகும் இவர், T20 போட்டிகளில் 99 போட்டிகளில் 109 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 150+ ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். இவர் மும்பை அணியின் பொல்லார்டுக்கு சிறந்த மாற்றாக இருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கருத்து பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு மாற்றாக எந்த வீரரை டிரேட் முறையில் லக்னோ அணிக்கு மும்பை வழங்கப்போகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
- வெ.அருண்குமார்