மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
இதையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார்.
தொடர்ந்து ஆடிய கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி சாதனைக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நம்பமுடியாத சாதனை. 50 ஒருநாள் சதங்கள். விராட் கோலி நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக் கோப்பை அரையிறுதியில் நிகழ்ந்த உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இன்று விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50 வது சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த விளையாட்டுத்திறனை வரையறுக்கும் விடாமுயற்சியின் உணர்வையும் எடுத்துக்காட்டுகிறார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல். அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோலை நிர்ணயித்துக்கொண்டே இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “50வது ஒருநாள் சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50 வது சதத்தை அடித்த வரலாற்று மைல்கல்லை எட்டியதற்காக விராட் கோலிக்கு பாராட்டுக்கள். இது உங்களின் சிறந்த விளையாட்டு வீரரின் மனப்பான்மை, அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு சாட்சி. உங்கள் விளையாட்டை இந்த சாதனை மேலும் புதிய நிலைக்கு உயர்த்தலாம். தேசம் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.