இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே எப்போதும் ஆட்டத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அனல் பறக்கும். அதுவும் உலக கோப்பை போட்டிகள் என்றால் கூடுதலான எதிர்பார்ப்பு இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இருக்கும்.
உதாரணத்திற்கு 2007 உலகக் கோப்பை போட்டிகளில் லீக் சுற்றிலேயே இரு அணிகளும் வெளியேற அந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக மோதிக்கொள்ளவில்லை. எப்போதும் உலக கோப்பை நடத்தி அதிக லாபம் பெறும் நாடுகள் மத்தியில், 2007 இல் உலக கோப்பை நடத்திய வெஸ்ட் இண்டீஸ் வாரியம் நஷ்டத்தையே சந்தித்தது. அந்த அளவுக்கு இந்திய பாகிஸ்தான் அணிகளின் தாக்கம் உலகக் கோப்பையில் இருக்கும்.
கடைசியாக இரு அணிகளும் 2019 உலகக் கோப்பையில் மோதின. வரலாற்றை மாற்றி எழுதும் நோக்கத்தில் சர்பிராஸ் அஹமது தலைமையில் பாகிஸ்தானும், வரலாற்றை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இருந்தன. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ், பந்து வீச்சின் மீது இருந்த நம்பிக்கையில் முதலில் இந்தியாவை பேட் செய்ய வைத்தார்.
கோலி தலைமையில், வெற்றி பெற்று வரலாற்றை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஹீரோவாக உருவெடுத்தார். தனது அதிரடி ஆட்டத்தால் சதம் அடித்த அவர் 140 ரன்கள் குவித்தார். ராகுல் (55) மற்றும் முன்னாள் கேப்டன் கோலி (77) இருவரும் அரை சதம் கடந்து, இந்திய அணிக்கு உலக கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 336 ரன்கள் எனும் அதிகபட்ச ஸ்கோர் பெற துணை நின்றனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியினர் தொடக்கம் முதலே தடுமாறினர். 35 ஓவர்களில் 166-5 ரன்கள் என்று இருந்த போது மழை குறுக்கிட்டு 40 ஓவர்களில் 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், நாளை நடைபெறும் போட்டியில் மோத உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் உள்ள நிலையில் நாளை நடைபெறும் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி நடைபெறும் மைதானம் ஸ்லோ விக்கெட் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு, முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே அஷ்வின் மற்றும் குல்தீப் இணையுடன் ஜடேஜா கூட்டணி மிரட்டும் என எதிர்பார்க்கலாம். பாக் அணிக்கு சதாப் கான், உஸ்மா மிர் கூட்டணி கை கொடுக்கும்.
பேட்டிங்கில் ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் பார்மில் உள்ளனர். பாக் அணிக்கும் ரிஸ்வான், ஷபிக் பார்மில் உள்ளனர், கேப்டன் பாபர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதுவரை உலக கோப்பைகளில் இரு அணிகளும் 7 முறை சந்தித்து உள்ளன. ஏழு முறையும் இந்திய அணியே வெற்றி வாகை சூடி ஆதிக்கம் செலுத்தி உள்ளது. எனவே அந்த வரலாற்றை தக்க வைக்க பெருமுயற்சி எடுக்கும். அதே நேரத்தில், பாகிஸ்தான் அணியும் மோசமான வரலாற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்யும். மொத்தத்தில் இருக்கை நுனியில் அமரும் இனிய தருணங்கள் நாளைய ஆட்டத்தில் காத்திருக்கிறது.
- வெ. அருண்குமார்