மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியைத் தழுவியது.
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் களமிறங்கின. தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஐந்து போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி வங்காளதேசம் அணியிடம் மட்டும் தோற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், வங்காளதேசம் அணியுடன் இன்று இறுதிப்போட்டியை எதிர்கொண்டது இந்திய அணி. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்கம் முதலே சொதப்பலாக ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணி, 20 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது. ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பு இருந்தாலும், அதை வங்காளதேசம் அணி தமதாக்கிக் கொண்டது. 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து ஆறுமுறை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. ஆனால், இன்றைய தோல்வி மூலம் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.