Skip to main content

இந்தியாவில் தேர்தலில் நான் போட்டியிட்டால்... - மனம் திறக்கும் ரஷீத்கான்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018

வெறும் 19 வயதேயான ஒரு சுழற்பந்து வீச்சாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களை கதிகலங்க வைத்து, உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான். 
 

Rashid

 

 

 

மிகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஆப்கானிஸ்தானின் சூழலில், கிரிக்கெட்டைக் கற்றுத்தேர்ந்து உச்சத்தை அடையமுடியும் என்று நம்பியதே அவரது முதல் வெற்றியாகும்.
 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்களில், சளைக்காத ஆட்டங்களை வெளிப்படுத்திய ரஷித் கான், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றவுடன் இந்தியாவுடன் களமிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவை ரஷீத்கான் பெற்றிருந்தார். 
 

Rashid

 

 

 

இந்திய ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது குறித்து பேசியுள்ள ரஷீத்கான், ‘வெளிநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரசிகர்களின் அபிமானத்தைப் பெறுவது எளிய காரியம் இல்லை. ஆனால், நான் அவர்களின் அன்பைப் பெற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். என் இரண்டாவது வீடாக என்னும் இந்தியாவிற்கு வருவதை நான் பெரிதும் விரும்புகிறேன். அன்பையும், உபசரிப்பையும் வழங்குவதை நான் இந்தியாவில்தான் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் உள்ள பல ரசிகர்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர். டி20 தொடர் முடிந்தபிறகு டேராடூனுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்குள்ள ஒரு உணவு விடுதியில் என்னைக் கண்ட ஒரு சிறுவன், ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டான். நான்தானா என்பதை அறிய என் கண்ணத்தைக் கிள்ளினான். மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் வரை என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தலில் நான் போட்டியிட்டால் வெற்றிபெறுவேன் என்றுகூட ரசிகர் ஒருவர் தெரிவித்தார்’ என மனம்திறந்து பேசியுள்ளார்.