Skip to main content

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது! - சச்சின் புகழாரம்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

தனது காலத்தில் இருந்ததை விடவும் தற்போதை இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு மிகச்சிறப்பாக உள்ளது என சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Sachin


 

 

இந்திய கிரிக்கெட் அணி நீண்ட காலத்திற்கு பின்னர் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக அடுத்தாண்டு உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சர்வதேச தரவரிசையில் நல்ல நிலையில் இருக்கும் இந்திய அணி, இந்தத் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படும் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவு குறித்து முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்தைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து பேசிய அவர், எனது காலத்தில் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பலமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. தலைசிறந்த வேகப்பந்து வீச்சு குழுக்களில் ஒன்றாகவே நான் அதைப் பார்க்கிறேன். தற்போதைய அணியில் கலவையான வேகப்பந்து வீச்சு குழு இருக்கிறது. ஸ்விங் செய்து அசத்தும் புவனேஷ்வர் குமார், உயரமான வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜஸ்பிரித் பும்ரா, அதிவேகமாக பந்துவீசும் உமேஷ் யாதவ் என தற்போதைய வேகப்பந்து வீச்சு பிரிவு பலம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. ஆல்ரவுண்டர் பாண்டியாவைப் போல், புவனேஷ்வரும் தேவையான நேரத்தில் ரன்குவிப்பில் ஈடுபடக் கூடியவர் என பெருமையாக பேசியுள்ளார்.