நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 14 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்தன. 12 சுற்றுகள் முடிவில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களான குகேஷும், பிரக்ஞானந்தாவும் தலா 8.5 புள்ளிகள் பெற்று சம நிலையில் இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற 13வது சுற்றில் இந்திய வீரர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசியிடமும், பிரக்ஞானந்தா, ஜெர்மன் வீரர் வின்சென்ட் கீமரிடமும் தோல்வி அடைந்தனர். இருப்பினும் 13 சுற்றுகள் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் சம புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் வகித்தனர்.
இதன் காரணமாக இவர்கள் இருவர் இடையே டை பிரேக்கர் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் முன்னாள் உலக சாம்பியனான, இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் இப்பட்டத்தை வெல்லும் 2வது இந்தியர் பிரக்ஞானந்தா ஆவார். டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “டாட்டா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று முதலிடம் பெற்றுள்ளேன் இது ஒரு பிரிஸ்டீசியாஸானா விளையாட்டு போட்டி ஆகும். 85 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நிறைய உலக செஸ் சாம்பியன்கள் நிறைய பேர் கலந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் 2024 ஆம் இரண்டாம் அரைப்ப்குதியில் நான் சரியாக ஆடாமல் இருந்து 2025ஆம் ஆண்டில் முதல் விளையாட்டில் முதல் இடம் பெற்றுள்ளேன் ரொம்ப சந்தோஷமாக உள்ளது”எனத் தெரிவித்தார்.