Skip to main content

நான்கு ஆண்டுகளில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய சரிவு!!!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

icc rankings new list

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த இந்திய அணி தற்போது அதனை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையின்படி, ஆஸ்திரேலியா அணி 116 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 115 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் 114 ரேட்டிங் புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது இந்திய அணி. 

கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விளையாடிய 100 சதவீத போட்டிகள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் 50 சதவீத போட்டிகளைக் கணக்கீடாக வைத்து இந்த தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேபோல டி20 தரவரிசை பட்டியலிலும் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை பிடித்துள்ளது. டி20 போட்டிகள் தொடங்கியதிலிருந்து இதுவரை தரவரிசையில் முதலிடத்தை பிடிக்காத அந்த அணி, தற்போதே முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

ஒரு நாள் தரவரிசையை பொறுத்தவரை இங்கிலாந்து அணி 127 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.