Skip to main content

ஐ.சி.சி. நம்பர் 1 பேட்ஸ்மேன்... குறைத்துமதிப்பிடப்பட்ட கம்பீர்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

முன்னாள் நம்பர் 1 பேட்ஸ்மேன், இருமுறை ஐ.பி.எல். கோப்பை, இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளின் நாயகன், மிகச்சிறந்த கேப்டன், உதவும் கரம், ட்விட்டர் ஹீரோ, சமூக ஆர்வலர், மனிதநேயமிக்கவர்... இதுபோல பல சாதனைகளுக்கும், விஷயங்களுக்கும் சொந்தக்காரர் கவுதம் கம்பீர். சச்சின், சேவாக், தோனி ஆகியோர் காலகட்டத்தில் கம்பீரின் சாதனைகள் மறைக்கப்பட்டுவிட்டன. அவரின் பங்களிப்புகள் அளவுக்கு அவரை நாம் கொண்டாடவில்லை என்பதே உண்மை.  

 

gg

 

 

2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவந்தார் கம்பீர். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் முக்கிய வீரராக இருந்தார். மற்ற சிறந்த வீரர்கள் ஏதாவது ஒரு ஃபார்மேட்டில் சரியாக ஆடமுடியாமல் இருந்தபோது, இவர் மட்டுமே மூன்று ஃபார்மேட்டிலும் சிறப்பாக ஆடிவந்தார். 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அதே ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதை பெற்றார்.

 

2009-ல் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாலோ-ஆன் ஆகியபோது இந்திய அணி தோற்றுவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், கம்பீரின் ஆட்டம் அவர்களது எண்ணத்தை தவிடுபொடியாக்கியது. 643 நிமிடங்கள், 436 பந்துகள், 137 ரன்கள். தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை காப்பாற்றினார். அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. கம்பீரின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. டெஸ்ட் போட்டிகளில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர் கம்பீர்தான் என சேவாக் ஒருமுறை கூறியிருந்தார்.  

 

gg

 

 

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கம்பீர், தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தேவையானபோது நிதானமாகவும் ஆடுவார். எதிரணியின் பவுலர்களை எளிதாக செட்டிலாக விடமாட்டார். தன்னுடன் அடுத்த முனையில் ஆடும் வீரருக்கும் நம்பிக்கையை அளிப்பார். அணியின் தேவைக்கு ஏற்ப, தன்னுடைய ஆட்ட வடிவத்தையும் மாற்றிக்கொள்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அதிரடியை காட்ட தயங்கமாட்டார். இவருடைய இன்சைடு அவுட் ஷாட்கள் மிகவும் பிரபலம். கம்பீர்-சேவாக் ஜோடி இந்தியாவின் சிறந்த பேட்டிங் இணைகளில் ஒன்றாகும். 

 

 

ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். பெரிய அளவில் பின்னணி இல்லாத அணியை வழிநடத்தி இருமுறை கோப்பையை வென்றுள்ளார். குல்தீப் யாதவ் போன்ற இளம்வீரர்களை உருவாக்கியதில் கம்பீரின் பங்கு மிகப்பெரியது. அணியின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டார். சுயநலமின்றி, அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்வார்.

 

 

gg

 

 

இளைஞர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி, அவர்களின் கிரிக்கெட் வாழ்வில் பெரும்பங்காற்றியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இக்கட்டான காலகட்டத்தில் கம்பீரின் உதவியே என்னை மாற்றியது என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் நிதிஷ் ரானா தெரிவித்திருந்தார். 

 

இந்திய அணிக்கு 6 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அந்த 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக அவரது பேட்டிங் சராசரி 90. தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த வீரர், நான்கு டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக 300+ ரன்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைகளை உடையவர் கம்பீர்.

 

இலங்கை அணி 2009-ல் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்போட்டியில் 316 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சேஸ் செய்து வென்றபோது கம்பீர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 150 ரன்கள் குவித்தார். விராட் கோலி தன்னுடைய முதல் சதத்தை பதிவுசெய்தார். ஆட்டநாயகன் விருது கம்பீருக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை அப்போது இளம் வீரரான கோலிக்கு அளித்து பெருமைப்படுத்தினார்  கம்பீர். அந்த நிகழ்வு கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த நிகழ்வாக கருதப்படுகிறது.   

 

இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் உட்பட 4,154 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள், 34 அரை சதங்கள் உட்பட 5,238 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 7 அரை சதங்கள் உட்பட 932 ரன்கள் சேர்த்துள்ளார். 

 

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், 2011-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இவரது பங்களிப்பு மிகவும் அபாரமானது. இரண்டு முறையும் அவர் ஆட்ட நாயகன் விருது பெறவில்லை. ஆனால் இருமுறையும் இந்திய அணியின் ஸ்கோர்கார்டு பார்த்தால், இவரது பங்கு எத்தகையது என்பது புரியும். 

 

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யூசுப் பதான் 15, உத்தப்பா 8, யுவராஜ் சிங் 14, தோனி 6 என மறுமுனையில் இருந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், கம்பீர் நிதானம் கலந்த அதிரடியுடன் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 157.   தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 18 ஓவர்வரை விளையாடி அணியின் ஸ்கோரில் 50 சதவீத ரன்களை எடுத்தார். மேலும், இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரும் இவர்தான். 

 

 2011-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் ஓவரில் சேவாக்கும்(0 ரன்கள்), ஏழாவது ஓவரில் சச்சினும்(18 ரன்கள்) அவுட்டாக, அணி 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பொறுப்பை எடுத்துக்கொண்ட கம்பீர் கோலியுடன் இணைந்து நிதானத்துடன் விளையாடினார்.  அணியின் ஸ்கோர் 114 ஆக இருந்தபோது கோலி அவுட் ஆனார். பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார் கம்பீர். இந்தப் போட்டியில் முதல் ஓவரில் களமிறங்கி 42 ஓவர்வரை விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த தொடரில் மொத்தம் 393 ரன்கள் குவித்தார் கம்பீர். இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரன்கள் இந்த தொடரில் எடுத்தவர் கம்பீர்தான் என்பது கவனிக்கத்தக்கது.

 

கிரிக்கெட்டில் மட்டுமல்ல. சமூகம் சார்ந்த விஷயங்களிலும் இந்தியாவுக்காக குரல் கொடுத்துவருகிறார். அவர் சத்தீஸ்கர் மற்றும் ஜோகிராவில் இறந்துபோன சி.ஆர்.பீ.எஃப் ஜவான்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியளித்தார். ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர் (ஜி.ஜி) அறக்கட்டளை தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார். சமூக பிரச்சனைகளின் போது சமூகவளைதலங்களில் தயங்காமல் தன்னுடைய கருத்தை கூறுவார். அது ராணுவம் தொடர்பாக இருந்தாலும் சரி, டெல்லியின் உள்ளூர் பிரச்சனையாக இருந்தாலும் சரி, டெல்லி கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தாலும் சரி, இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு குரல் கொடுப்பதாக இருந்தாலும் சரி. தன்னுடைய மனிதாபிமானத்தையும், தேசப்பற்றையும் தவறமால் பதிவுசெய்வார்.

 

2008-ஆம் ஆண்டில் விளையாட்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜுனா விருது பெற்றார். சமீப காலமாக இவர் பா.ஜ.க.வில் சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

கம்பீரின் சாதனைகளை நாம் பெரிய அளவில் கொண்டாடாதபோதும், அவர் தன்னால் முடிந்த அளவு கிரிக்கெட்டிலும், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் சிறப்பான பங்களிப்புகளை அளித்துவருகிறார். சமீபகாலமாக வர்னனையாளராகவும் பங்கேற்று வருகிறார். இவர் ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகிற்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.