Skip to main content

கே.எல்.ராகுலை வீட்டுக்கு அனுப்புங்க.. இவரை ஒப்பனிங் இறக்குங்க.. ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்கள்..

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும்  டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க இணை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.  இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 3, 63, 6, 0 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர். எனவே, இது கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது. தொடக்க ஜோடிகளை மாற்றுவதில் பல கோரிக்கைகளும் உள்ளன. 

 

 

kk

 

 

ப்ரித்வி ஷா மூன்றாவது போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் இன்னும் சரியாகாத காரணத்தால் தொடரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக மாயன்க் அகர்வால் அணியில் இடம்பெற்றுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் தொடரில்  அற்புதமாக  செயல்பட்ட போதிலும் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்பட்டு வந்தநிலையில், அவருக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முரளி விஜய்-கே.எல்.ராகுல், முரளி விஜய்-மாயன்க் அகர்வால், கே.எல்.ராகுல்-மாயன்க் அகர்வால் என ஒவ்வொருவரும் தொடக்க ஜோடி குறித்து தனது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேகர் ஒரு புது ஐடியாவை இந்திய அணிக்கு கூறியுள்ளார். முரளி விஜய் தொடர வேண்டும் என்றும், ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக களமிறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

hh

 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி பெர்த்தில் அவரது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹனுமா விஹாரிக்கு தொடக்க வீரராக விளையாடும் அளவிற்கு திறமை உள்ளது. ஆஸ்திரேலிய மைதானத்திற்கு ஏற்ப ஹனுமா விஹாரி ஒரு நல்ல டெக்னிக் கொண்டு விளையாடியுள்ளார்.  அவரது ஸ்கோரிங் ஷாட்ஸ் சிறப்பாக இருந்தது. 1, 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் விளையாடுவதற்கு அவர் சிறந்த வீரர். எனவே, டாப் ஆர்டர் பேட்டிங்கில்  விஹாரி பேட் செய்வது சிறப்பாக இருக்கும் என்பதை உணர வேண்டும் என்று மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

 

முரளி விஜய் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில், அவரின் சராசரி 17 மட்டுமே. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் சராசரி 6.50. தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா தொடரில் 2 போட்டிகளில் சராசரி 12.25. இதையும் தாண்டி விஜய் அணியில் விளையாடி வருவதற்கான காரணம்,  இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியிருந்தார். 

 

கே.எல்.ராகுல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் சராசரி 7.50. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் சராசரி 29.90. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் 2 போட்டிகளில் 18.50 மட்டுமே. ஆஸ்திரேலியா தொடரில் 2 போட்டிகளில் சராசரி 12. 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சிறப்பாக ஆடிவந்த ராகுலின் இந்த வருடம் பேட்டிங் சராசரி 22.29. அவர் ஃபார்ம் அவுட் மட்டுமில்லை; மனதளவிலும் நம்பிக்கை இழந்து விட்டதாக பல முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.

 

தற்போது ஆஸ்திரேலியா தொடரில் சரியாக விளையாடாத சில இந்திய வீரர்கள், இந்தியா திரும்பி உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இதில் கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து இந்தியா அனுப்புங்கள். ரஞ்சி ட்ராபி போட்டிகளில் அவர் ஆடவேண்டும். அது அவருக்கு நம்பிக்கையை அளிக்கும். உள்நாட்டு கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தவும் உதவும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

 

இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து பலர் விமர்சித்து வரும் நிலையில், கங்குலி இந்திய அணிக்கு ஆதரவு அளித்துள்ளார். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெற முடியும் என்று அணிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.