அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
தன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்தார். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மறுபுறம் தன் முதல் போட்டியை நெதர்லாந்து அணி பங்களாதேஷ் அணியுடன் விளையாடியது. பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 145 ரன்களை எட்ட முடியாமல் 135 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது.
இந்நிலையில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலை தவிர அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் அர்ஷ்தீப் சிங் அசத்துகிறார். ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்து வீச்சிலும் தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுப்பதால் இனி வரும் போட்டிகளில் அவர் மீதான எதிர்பார்ப்பு எப்பொழுதும் அதிகரித்தபடியே இருக்கும்.
நெதர்லாந்து அணியின் கூலின் அக்கெர்மேன் பங்களாதேஷ் உடனான போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக மற்ற நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செயல்படாததும் தோல்விக்கு ஒரு காரணம்.
இந்தியா நெதர்லாந்து அணிகள் சர்வதேச டி20 போட்டிகளில் இதற்கு முன் விளையாடியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடர்களில் ரன்ரேட் எப்பொழுதும் முக்கியப் பங்காற்றும் என்பதால் இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே வேளையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியதும் அவசியம்.