Skip to main content

தொடரை கைப்பற்றி அசத்திய வங்கதேசம்; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

Bangladesh won the series; The Indian team suffered a shock defeat

 

இந்திய கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி 4 ஆம் தேதி தாக்காவில் நடந்தது. அதில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவ இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. 

 

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 6 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய மஹமதுல்லா மற்றும்  8 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய மிஹதி ஹாசன் மிராஸ் இணைந்து பொறுமையாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக மஹமதுல்லா 77 ரன்களையும் மிஹைதி ஹாசன் 100 ரன்களையும் அடித்தனர். 

 

18 ஆவது ஓவரின் இறுதி பந்து வரை 6 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி அடுத்த 7 ஆவது விக்கெட்டை 46 ஆவது ஓவரில் தான் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்களையும் எடுத்தனர்.

 

272 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் 5 ரன்களிலும் தவான் 8 ரன்களிலும் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டு இருக்க 6 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய அக்ஸர் படேல் ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்து ரன்களை சேர்த்தனர். ஸ்ரேயாஸ் 34 ஆவது ஓவரில் இறுதிப் பந்தில் 82 ரன்களுக்கு வெளியேற, மீண்டும் விக்கெட்கள் வேகமாக சரிய ஆரம்பித்தது. இறுதியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 50 ரன்களை எடுத்தும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய வங்கதேச அணியின் ஹூசைன் 3 விக்கெட்களையும் மெஹைதி மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 

 

இப்போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.