2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள சூழலில், கரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நிறுத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29 ஆம் தேதி மும்பையில் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவி வருவதால் இந்த தொடரைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் பிசிசிஐ தரப்பில், தொடரைத் தள்ளிவைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 1,22,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 150 ஆண்டுக்கால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட 10-ற்கும் மேற்பட்ட முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளைக் காண மைதானங்களில் 30,000 முதல் 50,000 ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களில் யாருக்கேனும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.