ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா கரன், சரிதா மோர், பிங்கி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த திவ்யா கரன், சரிதா மோர், பிங்கி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி 2-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் துல்குன் போலோர்மாவை தோற்கடித்து தங்கம் வென்றார். 59 கிலோ எடைப் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் சரிதா மோர் 3-2 என மங்கோலியாவின் அட்லாண்ட்செட்செக்கை வீழ்த்தி தங்கம் வென்றார். அதேபோல 68 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் திவ்யா கரன் 6-4 என்ற கணக்கில் ஜப்பானின் நருஹா மாட்சுயுகியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிர் பிரிவில் மட்டும் நேற்று நடைபெற்ற 5 பிரிவுகளில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றது. இதன்மூலம், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணி கைப்பற்றிய அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இதுவே ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு கிர்கிஸ்தானில் நடைபெற்ற தொடரில் அதிகபட்சமாக மகளிர்பிரிவில் இந்தியா ஒரு தங்கம் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.