Skip to main content

'இப்படி பவுலர்களை வச்சுக்கிட்டு எப்படி ஜெயிக்கிறது?' - CSK, RCB மைண்ட்வாய்ஸ்

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
CSK VS RCB

 

ஐபிஎல் தொடரில், இன்று மாலை சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை, தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்திருந்தாலும் இன்றைய போட்டியில் வெற்றி அவசியமான ஒன்றாக இருக்கிறது. கடைசியாக விளையாடிய போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்ததற்கு காரணம் பவுலிங்கும் மோசமான பீல்டிங்கும்தான். அதேபோல, பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமென்றால் வருகின்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது.

சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், அவர்களுக்கு பிரச்சனையாக இருப்பது பவுலிங் ஒன்றுதான். நிதானமான பவுலர்களை வைத்து ரன்கள் கொடுக்காமல் போடும் அளவுக்கு பவுலர்கள் வேண்டும், விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். இதுபோன்ற பவுலர்கள் தற்போது சென்னை அணியில் இல்லாததால், என்னதான் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தாலும் செஸ் என்று வந்தால் நமக்கு அவ்வளவு சாதகமான ஒன்றாக இல்லை. 

 


சென்னை அணியின் பேட்ஸ்மேன்களான அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன் மற்றும் தோனி போன்றவர்கள் நல்ல பார்மில் இருப்பதால் சென்னை அணியின் இலக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எதிரணிக்கு எவ்வளவு இலக்கு நிர்ணயித்தாலும் அதை அவர்கள் அடிப்பதற்கு ஏற்ப பவுலிங் போடுகிறார்கள். ஆக, முதலில் சென்னை அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்து, இலக்குக்காக விளையாடுவது சிறந்தது.

பெங்களூர் அணிக்கும் இதுதான் நிலைமை. எப்படி சென்னை அணி பேட்டிங்கில் கில்லியாக இருக்கிறதோ அதே போன்றுதான் பெங்களூருவும் இருக்கிறது. பல ஐபிஎல்களாக பெங்களூருவின் நிலையே இதுதான் என்றால் பாருங்கள். பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி மட்டும்தான் எப்பொழுதும் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதுவரை அவர் 8 ஆட்டங்களில் 349 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்து டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருக்கிறார். காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் ஆடவில்லை. இன்றைய போட்டியில் இவர் களத்தில் இறங்க, டிகாக் வெளியேறுகிறார். 

இந்த இரு அணிகளுக்கும் நடந்த முதல் போட்டியிலேயே ஆர்சிபி அதிரடியாக, சென்னை அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இருந்தாலும் பவுலிங் சரியில்லாமல் இருக்க, சென்னையோ பேட்டிங்கில் செம பார்மில் இருக்க 205 ரன்களை சுலபமாக அடித்து வெற்றிபெற்றது. பார்ப்போம் இன்று என்ன நடக்கிறது என்று.