Skip to main content

அநாகரீகமாக நடந்துகொண்ட ஹர்மன்பிரீத் கவுர்; வைரலாகும் வீடியோ

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு போட்டிகளை வென்றும், கடைசி போட்டியில் தோல்வியுற்றும் இந்திய மகளிர் அணி டி20 தொடரை வென்றது. அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், தொடரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போட்டி கடந்த ஜூலை 22ஆம் தேதி பங்களாதேஷ், டாக்கா ஷேர் - இ - பங்களா மைதானத்தில் நடைபெற்றது. 

 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 225 ரன்களை எடுத்தது. அந்த அணியில் பர்கானா ஹக் சிறப்பாக விளையாடி 107 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. 

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

இந்திய அணியின் ஸ்கோர் 160 ஆக இருந்த போது, பங்களாதேஷ் அணியின் நகிதா அக்தர் வீசிய பந்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், எல்.பி.டபிள்யுவால் தனது விக்கெட்டை இழந்தார். இதில், நடுவர் அவுட் கொடுத்தபோது ஹர்மன்பிரீத் கவுர், பந்து தனது பேட்டில் படவில்லை, கால் பேடில் பட்டது என்று சைகை காட்டினார். ஆனாலும், நடுவர் அவுட் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஹர்மன்பிரீத் கவுர், தனது பேட்டினால் ஸ்டம்பை அடித்தார். இது போட்டியின்போது பெரும் சர்ச்சையானது. இறுதியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தப் போட்டி சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கான கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்மன்பிரீத் கவுர், “இந்த விளையாட்டின் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டைத் தவிர அங்கு நடக்கும் நடுவர் முறையும் எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அடுத்த முறை நாங்கள் பங்களாதேஷிற்கு வரும்போது இதுபோன்ற நடுவர்களைச் சமாளிப்பது குறித்து நாங்களே எங்களைத் தயார் படுத்திக்கொண்டு வரவேண்டும். நாங்கள் ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினோம், ஆனால் நான் முன்பு குறிப்பிட்டது போல் நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்” என்று கூறினார்.

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது. அதன்பிறகு இரு அணி வீரர்களும் இணைந்து குழு படம் எடுக்கும்போது, இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பங்களாதேஷ் அணியைப் பார்த்து, “ஏன் தனியாக இருக்கிறீர்கள்; நடுவர்களையும் அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியைச் சமன் செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களையும் அழைத்துப் புகைப்படம் எடுப்பது தான் நல்லது” என்று கூறினார். இதனைக் கேட்டு மனமுடைந்த பங்களாதேஷ் அணி கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டி, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, தனது அணியினரை அழைத்துக்கொண்டு டிரஸிங் ரூமிற்குச் சென்றார். 

 

Harmanpreet Kaur who behaved indecently; A viral video

 

அதைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோட்டி செய்தியாளர்களைச் சந்தித்து ஹர்மன்பிரீத் கவுரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதில் அவர்,  “ஹர்மன்பிரீத் அப்படிச் செய்தால் நாங்கள் எதுவும் செய்யமுடியாது. ஆனால், அவர் ஒரு வீரராகக் கொஞ்சம் நாகரீமாகப் பேசியிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க ஹர்மன்பிரீத் கவுருடைய முடிவு. அவரைப் பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அந்த இடத்தில் சூழல் சரியில்லை என்று உணர்ந்ததால் அந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேறினோம். கிரிக்கெட் மரியாதைக்குரிய விளையாட்டு மற்றும் அது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டும் கூட”  என்று கூறினார்.

 

இந்திய அணி கேப்டன், ஹர்மன்பிரீத் கவுரின் செயலும், பேச்சும் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ.சி.சி. ஹர்மன்பிரித் கவுருக்கு தனது சம்பளத்தில் இருந்து 75% அபராதம் விதித்து அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது.