தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் போட்டிகளுக்கான தலைமைப் பண்பு குறித்து கவுதம் காம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
13- ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், தோனி மற்றும் விராட் கோலியின் ஐ.பி.எல் அணித் தேர்வு மற்றும் தலைமைப்பண்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "தோனி மற்றும் விராட் கோலியின் தலைமைப் பண்பில் நிறைய வித்தியாசம் உள்ளது. தோனி முதல் ஏழு போட்டிகளில் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யமாட்டார். விராட் கோலியைப் பொறுத்தவரை இது நேர்மாறாக இருக்கும். முதல் சில போட்டிகளிலேயே பெங்களூரு அணியில் மாற்றம் செய்துவிடுவார். இதனால் அணியால் நிலை பெற முடிவதில்லை. முதல் சில போட்டிகளில் சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, அதே அணியோடு விராட் கோலி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். முதல் சில போட்டிகளிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பெங்களூரு அணி வீரர்கள் விளையாடும் விதமும், தொடர்ச்சியான வாய்ப்பும்தான் அவர்களைச் சிறந்த அணியாக்கும்" என்றார்.