Skip to main content

பறிபோனது ஸ்பான்சர்ஷிப்.. கேப்டன் பதவி பறிப்பு! - விடாது துரத்தப்படும் வார்னர்

Published on 28/03/2018 | Edited on 28/03/2018

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடையவர் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஆஸி. அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு வீழ்ச்சிமுகம் தொடங்கிவிட்டது.

Ware

தற்போது அவருக்கு ஸ்பான்சர் வழங்கிவந்த எல்.ஜி. ஆஸ்திரேலியா நிறுவனம், அதைத் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கே ஸ்பான்சர்களை இழக்க நேரிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

ஆஸ்திரேலியா நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டில், அந்நாட்டு வீரர்களே முறைகேடாக செயல்பட்டது ஆஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ஸ்பான்சர் வழங்கிவந்த எல்.ஜி. ஆஸ்திரேலியா நிறுவனம், ‘டேவிட் வார்னருக்கு வழங்கிவந்த ஸ்பான்சர்ஷிப் இறுதிவாரங்களில் உள்ளது. சமீபத்தில் அரங்கேறிய அதிருப்திகரமான சம்பவங்களால் அவருடன் ஸ்பான்சரை நீட்டிக்க விரும்பவில்லை. எங்கள் முக்கிய மதிப்பீடுகளை பகிர்ந்துகொள்ளும் தூதர்களோடு மட்டுமே பணியாற்ற விரும்புகிறோம்’ என தெரிவித்துள்ளது.

 

மேலும், ஐ.பி.எல். போட்டிகளில் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அணியின் புதிய கேப்டன் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.