நான் இன்று ஒரு சிறந்த டென்னிஸ் வீரர் என்று அழைக்கப்படுவதற்கு ரஃபேல் நடால் முக்கியக் காரணம் என ரோஜர் ஃபெடரர் தெரிவித்திருக்கிறார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல சாதனைகளைப் படைத்துவருகிறார். ஆக்ரோஷமும் சாதுர்யமும் கலந்த இவரது ஆட்டத்திற்கு, ஈடுகொடுத்து ஆடக் கூடியவர் ரஃபேல் நடால். மூட்டுப்பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தால் ஆறுமாதம் ஓய்வெடுத்துவிட்டு வந்த ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்நிலையில், லாரியஸ் விருதுவழங்கும் விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த கம்பேக் மற்றும் விளையாட்டுவீரர் என்ற இரண்டு விருதுகளைப் பெற்ற ஃபெடரர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது, ‘என் போட்டியாளர் ரஃபாவுக்கு (ரஃபேல்) நன்றி. நான் அவரை வாழ்த்த நினைக்கிறேன். இது அவருக்கு மறக்கமுடியாத வருடமாக இருக்கும். எங்களுக்குள் மிகப்பெரிய போட்டி இருந்தது மற்றும் ரஃபேலால் தான் நான் சிறந்த வீரராக உணர்கிறேன். இங்கு இந்த விருதோடு அவரும் நின்றிருக்கலாம். ஏனெனில், அவர் ஒரு திறமையான வீரரும், நண்பரும் ஆவார்’ என தெரிவித்துள்ளார்.