இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது. மேலும் அவரது இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கங்குலிக்கு மேலும் அளிக்கப்படவுள்ள சிகிச்சைகள் குறித்து, இன்று அவரது குடும்பத்தாரோடு ஆலோசனை நடத்தப்படும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை, "இன்று காலை 11.30 மணிக்கு, 9 பேர் கொண்ட மருத்துவக்குழு கங்குலியின் குடும்பத்தினரைச் சந்தித்து, கங்குலிக்கு மேலும் தரப்படவேண்டிய சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவர். மருத்துவர்கள், கங்குலி உடல்நிலை மேல் நிலையான விழிப்புணர்வைக் கொண்டிருப்பதோடு, தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.