Skip to main content

சென்னை அணிக்கு மீண்டும் ரெய்னா திரும்புகிறாரா?? அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் விளக்கம்!!!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

srinivasan

 

 

நடப்பு ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணியில் மீண்டும் ரெய்னா இடம் பிடிப்பாரா என்ற கேள்விக்கு அணி உரிமையாளரான ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இத்தொடருக்காக தயாராகி வந்த நிலையில் சென்னை அணியின் ஒரு பந்து வீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது சென்னை அணியால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரில் பங்கெடுக்க முடியுமா என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சென்னை அணியின் முக்கிய வீரரான ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகம்  அறிவித்தது. சொந்த காரணங்களுக்காகவே ரெய்னா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று முதலில் கூறப்பட்டாலும், சென்னை அணி உரிமையாளருக்கும் ரெய்னாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சென்னை அணியின் கேப்டனான தோனியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகின.

 

சென்னை அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனும் 'வெற்றி தலைக்கேறி விட்டது' எனக் காட்டமாக பேட்டியளித்தார். இதனால் அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர். இந்த நிலையில் நேற்று ரெய்னா இது குறித்து விளக்கம் அளித்தார். அதில் ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறியது முழுவதும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும், அவர் கூறியதை ஒரு தந்தை கூறியதை போல எடுத்து கொள்கிறேன் என்றார். மேலும் இந்தாண்டிலேயே சென்னை அணியில் என்னைக் காண்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில் அவர், "ரெய்னாவை என் மகனைப் போல தான் நடத்தினேன். ரெய்னா மீண்டும் அணியில் இடம்பெறுவாரா, இல்லையா என்பது என் கையில் இல்லை. அது அணி நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் தோனி எடுக்க வேண்டிய முடிவு. யார் அணியில் இடம்பெற வேண்டும் என்பதில் இதுவரை நான் தலையிட்டதில்லை. எங்களிடம் சிறந்த கேப்டன் இருக்கும்போது இந்த விஷயங்களில் நான் தலையிட வேண்டிய தேவை இல்லை" என்றார்.