இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அடுத்து, டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் முக்கியப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. உடல்தகுதியை நிரூபித்தாலும், கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, முதல் சில போட்டிகளில் அவரால் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஷமி, பும்ராவோடு இந்திய அணியில் ஆடப்போகும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், மது அருந்தும்போது, இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார்? என இந்தியா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தன்னிடம் கூறியதாகத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, இயான் சேப்பல் அளித்த பேட்டி ஒன்றில், "நான் ஒருநாள் ரவி சாஸ்திரியுடன் மது அருந்தினேன். அப்போது ரவி சாஸ்திரி, உமேஷ் யாதவ் இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்" எனக் கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ரவி சாஸ்திரி, குடிபோதையில் அணியின் திட்டத்தை எதிரணிக்கு ஆதரவானவரிடம் உளறிவிட்டதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்திய ரசிகர்கள், குடிப் பழக்கத்திற்காக ரவி சாஸ்திரியை, கிண்டல் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.