16 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் எதிரணியை வீழ்த்த வியூகங்கள் வகுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 17 ஆவது லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கும் 200 ஆவது போட்டியாகும். இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மைதானத்திற்கு தகுந்தபடி திட்டங்களை அமைத்துக் கொள்வோம். ஃபீல்டிங்கிற்கு தகுந்தவாறு பந்து வீச வேண்டும். இப்போதெல்லாம் எவ்வளவு ரன்களும் பாதுகாப்பானதாக இல்லை. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஐபிஎல் கேப்டனாக 200 ஆவது போட்டி. அவர் ஐபிஎல் மட்டுமல்லாது இந்திய அணியிலும் ஜாம்பவானாக இருந்துள்ளார். கடந்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றதைப் போலவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் அந்த வெற்றி தோனிக்கு சிறந்த பரிசாக இருக்கும்.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு ஏற்ற ஆடுகளம் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்கும். இரு அணியிலும் திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சென்னை ராஜஸ்தான் இடையேயான ஐபிஎல் போட்டி சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மோதலாக இருக்கும்” எனக் கூறினார்.