ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் டெல்லி அணி, எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் முதலிடத்துக்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மல்லுக்கட்டி வருகிறது. அந்த அணி பேட்டிங்கில் சறுக்கினாலும் தனது பந்து வீச்சை கொண்டு வெற்றியை பெற்றுவருகிறது. பேட்டிங்கில் ஸ்டோய்னிஸ்; பவுலிங்கில் ரபாடா, நோர்கியா ஆகியோர் வலுசேர்க்கின்றனர். குறிப்பாக, நோர்கியா கடந்த ஆட்டத்தில் பந்து வீசிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .
அதே நேரம் சென்னை அணி தட்டு தடுமாறி வெற்றிபாதைக்கு திரும்பியுள்ளது.பேட்டிங்கில் டூப்ளஸிஸ், ராயுடு போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அணி அதிகம் நம்பியுள்ளது. அவர்கள் சொதப்பினால் அணி மீள்வது கடினம். அவர்கள் ரபடா நோர்கியாவின் பந்து வீச்சை சமாளிப்பதை பொறுத்தே சென்னை அணியின் வெற்றி அமையும் என்பது மறுக்கமுடியாது. அதேநேரம், பவுலிங்கில் தீபக் சஹர், பிராவோ, சாம் கரண் ஆகியோர் நன்றாக பந்து வீசிவருவது சென்னை அணிக்கு பலமாகும். சாம் கரண் பேட்டிங்கிலும், ரன் சேர்ப்பது சென்னை அணிக்கு நல்ல விஷயம். கடந்த போட்டியில் ஏழு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி சென்னை அணி, இந்த போட்டியில் ஒரு பௌலருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை இறக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் தோனி அடிக்கடி அணியை மாற்றுவதில்லை என்பதால் அதே அணி தொடரவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
டெல்லி அணியில் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடாத ரிஷப் பந்த் இன்று ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த ஷ்ரேயஸ் ஐயர் இப்போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகமே. அவர் விளையாடாவிட்டால் டெல்லி அணிக்கு பின்னடைவாக அமையும். இந்த போட்டியில் வென்று டெல்லி அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கும். அதே நேரம் இனிவரும் அனைத்து ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை அணி இன்று வென்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும். இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம் .
- ராஜபுத்திரன்.