பல கேப்டன்கள், ஒவ்வொரு சீசனிலும் மாற்றப்பட்ட பல வீரர்கள், புதுப்புது பயிற்சியாளர்கள் என பல விஷயங்களை மாற்றிவிட்டது டெல்லி. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை மற்றுமொரு முயற்சியாக அணியின் பெயரையும் மாற்றியுள்ளது. மேலும் இந்திய அணியை கட்டமைத்த கங்குலியை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.
ஐ.பி.எல். தொடரில் தற்போது விளையாடும் அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. 11 ஆண்டுகள் கனவை நினைவாக்கும் வகையில் புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் இளம் வீரர்கள் கொண்டு விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 11 சீசனில் 3 முறை மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ், வார்னர், பீட்டர்சன் என பல ஜாம்பவான்கள் முதல் சில தொடர்களில் டெல்லி அணியில் விளையாடினார்கள். 7 கேப்டன்கள், 5 பயிற்சியாளர்கள் என டெல்லி அணி ஒவ்வொரு ஆண்டும் பல மாற்றங்கள் கொண்டு வந்த நிலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான புள்ளி விவரங்கள் கொண்ட அணியாக டெல்லி உள்ளது.
கடந்த ஆண்டு சிறப்பான வீரர்கள் இருந்தும் சரியான டீம் காம்பினேஷசன் அமையாமல் லீக் சுற்றில் கடைசி இடத்தை பிடித்தது. முக்கிய வீரர்களான மேக்ஸ்வெல், கம்பீர், காலின் மன்றோ, ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஃபார்ம் இல்லாமல் இருந்தது, ரபாடா காயம் காரணமாக தொடரில் வெளியேறியது போன்றவை தொடரின் முதல் பாதியில் பெரிய பலவீனமாக அமைந்தது.
இந்த முறை காலின் மன்றோ, பிரித்வி ஷா, ஷிகர் தவான் என வலுவான தொடக்க ஆட்டக்காரர்கள் எதிரணிக்கு சவாலாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் பலமாக உள்ளனர். டாப் 5 பேட்ஸ்மேன்கள் வலுவாக உள்ளனர். கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல் ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங்கில் ஹிட்டர்களாக சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, அங்குஷ் பெயின்ஸ் ஆகியோர் பேக்அப் வீரர்களாக பேட்டிங்கில் பங்களிப்பார்கள்.
அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சான், ராகுல் டிவாட்டியா, அக்சர் படேல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் அணிக்கு பலமாக இருப்பார்கள். சந்தீப் லமிச்சான் இந்த முறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, ஹர்ஷால் படேல், அவேஷ் கான் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு வலு சேர்க்கின்றனர். கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல், ஷேர்பான் ரூதர்போர்டு, பண்டாரு ஐயப்பா, ஜலஜ் சக்சேனா ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அணிக்கு உதவுவார்கள்.
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களான ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ் போன்ற ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா என்பது சந்தேகம். உள்ளூர் ஃபாஸ்ட் பவுலர்களில் டி20 ஸ்பெஷலிஸ்ட் இல்லாதது பவுலிங் யூனிட்டுக்கு பெரிய பலவீனமாக அமையும்.
கவுதம் கம்பீர், ஜேசன் ராய், மேக்ஸ்வெல், குர்கீரத் மான், முஹம்மது ஷமி, டேன் கிறிஸ்டியன், சயான் கோஷ், லயிம் பிளங்கெட், ஜூனியர் டலா, நமன் ஓஜா ஆகிய வீரர்களை இந்த ஆண்டு விடுவித்து விட்டு ஷிகர் தவான், காலின் இங்க்ராம், அக்சர் படேல், ஹனுமா விகாரி, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால் ஆகியோரை எடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளராக முஹம்மது கைஃப், ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக ஜெம்ஸ் ஹோப்ஸ், ஆலோசகராக கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 வீரர்களில் 16 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
பலம்:
வலுவான டாப் ஆர்டர் பேட்டிங்.
சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூன்ட்.
பலவீனம்:
வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகம்.
கிறிஸ் மோரிஸ் தவிர பலமான ஆல்ரவுண்டர்கள் இல்லை.
சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை.
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் விவரம்:
ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, காலின் இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ராகுல் டிவாட்டியா, சந்தீப் லமிச்சான், ஹர்ஷால் படேல், அவேஷ் கான், இஷாந்த் சர்மா, மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, பண்டாரு ஐயப்பா, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால், நது சிங், அங்குஷ் பெயின்ஸ்.