தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான டேவிட் வார்னர் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியை வழிநடத்தி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 529 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த 6 தொடர்களாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர், புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
2014, 2015, 2016, 2017, 2019, 2020 ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் முறையே, 528, 562, 848, 641, 692, 529 ரன்கள் குவித்துள்ளார். களமிறங்கிய தொடர்களில், தொடர்ச்சியாக ஆறு முறை 500 ரன்களுக்கு மேல், ஒரு வீரர் குவிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியபோது பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விதிக்கப்பட்ட தடை காரணமாக 2018 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் வார்னர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.