கிரிக்கெட் நடுவர் அனில் சவுதாரி, ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு உதவும் வகையில் சைகை காட்டினார் எனப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 47 -ஆவது லீக் போட்டியில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. களத்தில் முதல் நடுவராக அனில் சவுதாரி செயல்பட்டார். ஹைதராபாத் அணி வீரர் சந்தீப் ஷர்மா 17-ஆவது ஓவரை வீச, அதனை டெல்லி அணி வீரர் அஷ்வின் எதிர்கொண்டார்.
அந்த ஓவரில், சந்தீப் ஷர்மா வீசிய பந்திற்கு, ஹைதராபாத் அணி வீரர்கள் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட, நடுவர் நாட்-அவுட் எனக் கூறி அவுட் தர மறுத்தார். அணி கேப்டனான டேவிட் வார்னர், கள நடுவரின் முடிவை மூன்றாம் நடுவரிடம் முறையீடு செய்ய முயலும் போது, அனில் சவுதாரி, பந்து காலில் படவில்லை. பேட்டில் பட்டது என டேவிட் வார்னரிடம் சைகை மொழியில் கூறினார்.
நடுவரின் இச்செயல் கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானது என்பதால் தற்போது இது புது சர்ச்சையாக வெடித்துள்ளது.