உலக கோப்பையின் 17 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் புனே மைதானம் இந்தியாவுக்கு அவ்வளவு சாதகமான மைதானம் என்று சொல்ல முடியாது. இதுவரை இந்திய அணி அங்கே பங்கு பெற்ற ஏழு ஒரு நாள் போட்டிகளில் 4 இல் வெற்றியும், 3 இல் தோல்வியையும் சந்தித்து உள்ளது.
பெரும்பாலும் பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இதுவரை நடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. சேஸிங் செய்த அணியும் 3 முறைக்கு மேல் 300 ரன்கள் எடுத்து உள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 307 ஆகும்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021 இல் எடுத்த 356 ரன்களே இங்கு அதிக பட்சமாகும். தனிநபர் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 124 எடுத்துள்ளார். பும்ராவின் 35/4 சிறந்த பந்து வீச்சாகும். இந்திய அணி, 2022 முதல் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் 42 முறை இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் கையில் அவுட் ஆகி உள்ளது. எனவே பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப், துருப்பு சீட்டாக இருப்பார்.
காயத்தால் அவதிப்பட்டு வரும் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் போட்டி தொடங்கும் முன் தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் விளையாடிய அணியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை லீக் போட்டியில் தோற்றதற்கு பதிலடி தர இந்தியாவும், இரண்டாவது வெற்றியைப் பெற பங்களாதேசும் முயலும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
- வெ.அருண்குமார்