ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு பணம் கேட்டு மீண்டும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு கடந்த 27 ஆம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், ‘நீங்கள் 20 கோடி ரூபாய் தரவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் நபர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கொலை மிரட்டல் குறித்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அண்டிலா வீட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காம்தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் மும்பை காம்தேவி காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (28-10-23) முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்த முறை ரூ. 200 கோடி தரவேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’ என்று தெரிவித்திருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே ரூ.20 கோடி கேட்டுக் கொலை மிரட்டல் விடுத்த நபர் தான் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் முகேஷ் அம்பானிக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.