கடந்த 14 ஆம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் வரும் மே மாதம் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறும்போது, 'பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பதை விட அவர்களுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும்' என கூறினார்.
இதனையடுத்து இன்று காலை இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர், 'இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி ஜெயிக்க வேண்டும். 1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை தோற்கடித்தது. அதுபோல இந்த முறையும் நடக்க வேண்டும், அவர்களுடன் விளையாடாமல் புறக்கணிப்பது என்பது போரிடாமலே தோற்றுப்போவது போல ஆகும்' என கூறினார்.
இதனை தொடர்ந்து தற்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வீரர் சாஹல், 'இதில் பிசிசிஐ அமைப்பின் முடிவு தான் முக்கியம். அவர்கள் விளையாட சொன்னால் நாங்கள் விளையாடுவோம், இல்லை என்றால் விளையாட மாட்டோம்' என கூறியுள்ளார். இப்படி இந்த விவகாரத்தில் அனைவரும் மாறிமாறி கருத்து கூறிவரும் நிலையில் இதற்கான இறுதி முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.