உலகக்கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குபின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்துள்ளது பிசிசிஐ.
அதன் முதல் அடியாக தலைமை பயிற்சியாளர் முதற்கொண்டு பலரை புதிதாக எடுக்க இருக்கிறது பிசிசிஐ. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
பயிற்சியாளர்களில் மட்டுமில்லை, அணிக்குள்ளும் சில அதிரடி மாற்றங்களை பிசிசிஐ அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக்கோப்பை ஆட்டத்தின்போது தோனி விளையாடும் விதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன, விராட்கோலியின் மீதும் அதிருப்திகள் உருவாகின.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கப்படுவார், அந்த இடத்திற்கு உலகக்கோப்பையில் சிறந்த பங்களிப்பாற்றிய ரோஹித் சர்மா வருவார் என்றும், அதேபோல் தோனி அணியிலிருந்து விலக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் தோனி இதோடு விலகப்போகிறார், தனது ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தோனியை அணியிலிருந்து நீக்கப்போகின்றனர் என்ற தகவலும், கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்போகின்றனர் என்ற தகவலும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.