Skip to main content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தடுப்பூசியால் தகர்ந்த ஜோகோவிச் கனவு! 

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Australian Open tennis: Djokovic's dream of being vaccinated!

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ரூ. 405 கோடி பரிசுத் தொகை கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. 

 

கரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்ற 34 வயது ஜோகோவிச் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். ஜோகோவிச்சின் விசா ரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கோர்ட்டு அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ந் தேதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸுக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஜோகோவிச் மீண்டும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 

ஜோகோவிச் மனு மீது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு முன் விசாரணை நடைபெற்றது. இதில்,  நீதிபதிகள் ஜோகோவிச் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பங்கேற்க முடியாது. அதேபோல், அவர் ஆஸ்திரேலியவிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.