இந்தாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கிற ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் குறித்தான அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்தவகையில், முதற்கட்டமாக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டியானது நவம்பர் 27, நவம்பர் 29, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரானது டிசம்பர் 4, டிசம்பர் 6, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் -
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபாட், ஆஸ்டன் அகர், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், டேவிட் வார்னர், மோஸ்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், ரிச்சார்ட்ஸன், ஆடம் ஜம்பா, மிட்ஷெல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட்.
உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, மிகவும் பிரபலமடைந்த இளம் வீரரான கேமரூன் க்ரீன், முதல்முறையாக தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான அவரின் ஆட்டத்தைப் பார்க்க ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.