இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி இன்று தொடங்கியது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் புதிய சாதனையை படைக்க உள்ளனர். 34 வயதான விராட் கோலி இதுவரை இந்திய மண்ணில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3958 ரன்களை எடுத்த விராட் 59.43 சராசரியில் ஆடி வருகிறார். இதுவரை 13 சதங்களையும் 12 அரை சதங்களையும் அடித்த இவர் அதிகபட்சமாக 254 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடாத விராட் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் 111 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்துள்ளார். என்றாலும் கூட விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அவர் இன்னும் 42 ரன்களை மட்டும் எடுத்தால் 4000 ரன்களை எடுத்த 5 ஆவது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இதுவரை சச்சின், ராகுல் ட்ராவிட், சேவாக், கவாஸ்கர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்துவீச்சாளராக உள்ள அஸ்வின் இதுவரை ஆஸி அணிக்கு எதிராக 22 டெஸ்ட் போட்டியில் விளையாடி 108 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 விக்கெட்களை மட்டும் எடுத்தால் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் கும்ளேவின் சாதனையை சமன் செய்வார். கும்ப்ளே ஆஸி அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகள் ஆடி 111 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஸ்வின் இன்னும் 10 விக்கெட்களை கைப்பற்றினால் சர்வதேச அளவில் 700 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.