பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சாகித் அஃப்ரிடிக்கு இன்று 38ஆவது பிறந்ததினம். பாகிஸ்தானுக்காக அவர் விளையாடினாலும், இந்தியாவில் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம்.
களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவராக சொற்ப ரன்களில் வெளியேறிய போதெல்லாம், தனியாளாக ரன்களைக் குவித்து அணியை வெற்றிக்குக் கூட்டிச் சென்றவர். தனது அதிரடியான வானவேடிக்கைகளால் இப்போதும் பூம் பூம் அஃப்ரிடி என்று செல்லமாக அழைக்கப்படும் சாகித் அஃப்ரிடி குறித்த சுசாரஸ்யமான தகவலை அவரது பிறந்ததினமான இன்று காணலாம்.
1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார் அஃப்ரிடி. அதுதான் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவருக்கு அறிமுக ஆட்டம். அந்தப் போட்டியில் முதல் விக்கெட் விழுந்தவுடன் களத்திற்கு வந்த அஃப்ரிடி, 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். அதுவே அவரது முதல் சதமும் கூட. ஆட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாக்வார் யூனஸ் ஆட்டத்திற்கு முன்பாக என்னிடம் சச்சின் தெண்டுல்கரின் பேட்டைக் கொடுத்தார். அதை வைத்துதான் நான் வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன்’ என தெரிவித்திருந்தார்.
எப்போது களத்திற்கு வந்தாலும் ரசிகர்களின் உற்சாகத்திற்கு பஞ்சமில்லாமல் விளையாடும் அஃப்ரிடி பற்றிய சுவாரஸ்யான தகவலோடு, நாமும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.