400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் பதினோரு ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
பாட்டியாலாவில் ஃபெடரேஷன் தேசிய சீனியர் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான அய்யாசாமி தருண், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 49.45 விநாடிகளில் ஓடிக்கடந்தார். இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய வீரர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
இதற்கு முன்னர் இந்திய வீரர் ஜோசப் ஆபிரகாம் 400 மீட்டர் தூரத்தை 49.51 விநாடிகளில் ஓடிக்கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது அதை அய்யாசாமி தருண் முறியடித்திருக்கிறார்.
தங்கப்பதக்கம் வென்ற உற்சாகத்தில் பேசிய தருண் விஜய், ‘கடந்த சில தினங்களாக டைப்பாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் என்னால் முறையாக பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. சமீபத்திய பயிற்சி ஓட்டங்களிலும் என்னால் சரியாக ஓடமுடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் என்ன நடந்ததென்பதே தெரியவில்லை. இலக்கை ஓடிக்கடந்தால் போதுமென்று நினைத்தேன். ஆனால், அது சாதனையில் முடிந்திருக்கிறது. மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
கோ-கோ வீரராக இருந்த தருண், பின்னர் தடகள போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டவர். தற்போதைய சாதனையின் மூலம் காமன்வெல்த் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.