களத்தில் நூறு ரன்களைக் கடக்கப் போகும் எந்த வீரராக இருந்தாலும் பதற்றம் சூழ்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு ரன்னாக சிறுகச்சிறுக சேர்த்து சதத்தைத் தொட்டுவிட்டால் எவரெஸ்டைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். அதுவே, தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்தால் அந்த உற்சாகம் எந்தளவுக்கு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலாஸ்டெய்ர் குக், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். தன் கடைசி போட்டியில் ரசிகர்களை ஏமாற்றாமல் சதமடித்தது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதற்காக தான் பும்ராவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதாகவும் குக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “97 ரன்கள் அடித்திருந்தபோது இன்னும் மூன்று ரன்களைச் சேர்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். பந்தை அடித்துவிட்டு ஓடியபோது, அது பும்ரா கையில் சிக்கியது. கொஞ்சம் பொறு.. என எனக்குள் நானே சொல்லிக்கொண்டு ஓடினேன். அவர் கொஞ்சம் ஆக்ரோஷமாக அதை எறிந்துவிட்டார். பந்தைத் தடுக்க ஜடேஜாவும் அங்கில்லை. இதயம் முழுக்க சூழ்ந்திருந்த வலியை அந்த ஓவர் த்ரோ ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. பும்ரா இந்தத் தொடர் முழுக்க நிறைய இதயவலிகளைத் தந்திருந்தாலும், அதை அவரே போக்கிவிட்டார். அவருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.