Skip to main content

60 வயதானாலும் பெஸ்ட் பவுலர்களை விளாசுவேன் – கெயில்

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியான இங்கிலாந்து கடைசியாக விளையாடிய 14 தொடர்களில் 12 தொடர்களை வென்று, பலவீனமான அணி என்று கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்த கெயில் சிறந்த பவுலர்களை கொண்ட இங்கிலாந்து அணியை தெறிக்கவிட்டார். ஓய்வு முடிவை அறிவித்து தனது சொந்த மண்ணில் கடைசி தொடரை விளையாடிய கெயிலின் ஆட்டத்தில் சில பந்துகள் மைதானத்திற்கு வெளியே சென்றது. 39 வயதான கெயிலா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஆட்டம் இங்கிலாந்து அணியை அலறவிட்டது.

 

chirs gayle

 

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரசித், வுட், ஸ்டோக்ஸ், வோக்ஸ், பிளன்கட், அலி என இங்கிலாந்து அணி பவுலர்களின் எகானமி ரேட் 6+. விளையாடிய 4 போட்டிகளிலும் கெயில் வானவேடிக்கை காட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் எடுத்த ரன்களில் 37% ரன்கள் கெயில் அடித்தவை. 424 ரன்கள், 134 ஸ்ட்ரைக் ரேட், 106 பேட்டிங் சராசரி, 2 சதங்கள், 2 அரைசதங்கள் என வரலாற்றில் மிகச்சிறந்த தொடராக கெயிலுக்கு அமைந்தது. 
 

2007-ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டி. பொல்லாக், நிட்னி போன்ற மிகச்சிறந்த பாஸ்ட் பவுலிங் யூனிட்டை நாலாபுறமும் கெயில் விளாச தென் ஆப்பிரிக்கா அணியின் பவுலிங் தடுமாறியது. 10 சிக்ஸர்கள் பறக்க டி20 உலகக்கோப்பை தொடங்கியது. இதுதான் சேவாக், கெயில் போன்ற அதிரடி வீரர்களின் பேட்டிங் பாணி. அதன்பிறகு டி20, ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் அதிரடி காட்ட ஆரம்பித்தார். 
 

chirs gayle

 

2018 ஐ.பி.எல். ஏலத்தின்போது எந்த அணியும் கெயிலை எடுக்க முன்வரவில்லை. ஆனால் சேவாக் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஏலத்தின் இறுதி கட்டத்தில் வாங்கப்பட்டார். அந்த சீசனில் 1 சதம், 3 அரைசதம், பேட்டிங் சராசரி 41, ஸ்ட்ரைக் ரேட் 146 என எதிரணி பவுலர்களை திணறடித்தார். பெரும்பாலும் பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் கலக்கி வந்த கெயில் உலகக்கோப்பை சமயத்தில் சர்வதேச போட்டிகளில் மீண்டும் வந்தது  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. 
 

ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனையை கெயில் தற்போது முறியடித்துள்ளார். இதற்கு முன்பு உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 290 பந்துகளை சந்தித்து 26 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இந்த தொடரில் 4 போட்டிகளில் 316 பந்துகளில் 39 சிக்ஸர்கள் அடித்து உலகசாதனை புரிந்துள்ளார். அதேபோல ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த ரோகித் சர்மா சாதனையை கெயில் முறியடித்துள்ளார். சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 66 சிக்ஸர்கள் அடித்திருந்தார். தற்போது கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 84 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 
 

ஒரு தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற அதிக வயதான இரண்டாவது வீரர் கெயில் தான். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாகிர் 39 வருடம், 193 நாட்கள் இருக்கும்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர் நாயகன் விருதை வாங்கினார். கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 39 வருடம், 163 நாட்கள் இருக்கும் போது தொடர் நாயகன் விருதை வாங்கியுள்ளார். 

 

chirs gyle

 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் குறைந்த பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்த டேரன் சமி சாதனையை முறியடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சமி 20 பந்துகளில் 50 எடுத்திருந்தார். கெயில் 19 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து சாதனையை தனதாக்கியுள்ளார்.
 

தொடர்ந்து 5  இன்னிங்ஸ்களில் 50+ ரன்கள் எடுத்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர், இங்கிலாந்து தொடரில் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 96.10% ரன்கள் பவுண்டரிகள் மூலம் எடுத்தது என பல சாதனைகளை படைத்தார் கெயில். கெயில் மட்டும் இந்த தொடரில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் நம்பர் 1 இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 37 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

60 வயதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சை அடித்து நொறுக்குவேன். எனக்கு வயது ஒரு தடை அல்ல, ஃபிட்னஸ் மட்டுமே பிரச்சனை என்று கெயில் தெரிவித்திருந்தார் என்பது நாம் மறந்துவிடக்கூடாது.