ஐசிசி சர்வதேச போட்டிகளில் சுவாரசியமான ஒரு போட்டி ஓமன் நாட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. ஸ்காட்லாந்து அணி ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று அல் அமராட் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி மளமளவென தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகினர். இந்நிலையில் அந்த அணியில் கவார் அலி மட்டும் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 25 ரன்கள் என்ற இலக்குடன் தனது பேட்டிங்கை தொடங்கிய ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 4 ஆவது ஓவரில் 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் சுருண்ட நான்காவது அணி என்ற பெயரை ஓமன் அணி பெற்றுள்ளது. அதுபோல ஓமன் அணியில் 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10 பந்துகளுக்கு மேல் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.