அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, கடுமையான தோல்விகளைச் சந்தித்து முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து, சென்னை அணியின் முன்னணி வீரர்களின் செயல்பாடு குறித்தும், தோனியின் அணி வழிநடத்தும் திறன் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவிருக்கிறார் என்ற தகவலும் பரவியது. தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் என இருதரப்புமே இது குறித்து விளக்கம் அளித்தது. இருப்பினும், பல்வேறும் தரப்பினரும் இது குறித்து தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இது குறித்துப் பேசுகையில், "அடுத்த ஆண்டு பெரிய ஏலம் நடைபெறும் பட்சத்தில் சென்னை அணி தோனியை ஏலத்தில் விடவேண்டும். ஏலத்தின்போது தக்க வைத்துக்கொண்டால் மூன்று வருடம் அந்த வீரரோடு பயணிக்க வேண்டி வரும். தோனி மூன்று வருடம் அணியில் இருப்பாரா? தோனியை அணியில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் கூறவில்லை. அவரைத் தக்க வைக்க வேண்டுமென்றால் 15 கோடி செலவு செய்ய வேண்டி வரும். ஒருவேளை அவர் அடுத்த ஒரு ஆண்டு மட்டும் விளையாடினால், அடுத்த வருடம் அந்த 15 கோடி அணி நிர்வாகத்திற்கு திரும்பக் கிடைத்துவிடும். ஆனால், அந்த நேரத்தில் 15 கோடி ரூபாய்க்கு தகுதியான ஒரு வீரரை எப்படி கண்டுபிடிப்பீர்கள். பணம் இருந்தால் பெரிய அணியை கட்டமைத்துவிடலாம் என்பதே பெரிய ஏலத்தில் சாதகமான விஷயம். எனவே தோனியை ஏலத்தில் விட்டு அதன்பிறகு எடுத்துக்கொள்ளலாம். இது சென்னை அணிக்கே நன்மை பயக்கும்" எனக் கூறினார்.