மருத்துவர் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது அவர் அணிந்திருக்கும் ஸ்டெதஸ்கோப் தான். அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு டாக்டர் அருணாச்சலம் பதிலளிக்கிறார்.
ஸ்டெதஸ்கோப் பயன்படுத்தி நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சனைகளைக் கண்டறிய முடியும். ஸ்டெதஸ்கோப் இல்லாமல் ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூடச் சொல்ல முடியாது. 1781 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு டாக்டரால் ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது. குறைவான எடை, சிறந்த தரம் என்று மருத்துவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. தற்போதைய தொழில்நுட்பத்தில் மானிட்டரில் அனைத்தும் தெரிந்து விடுகிறது.
ஆபரேஷன் தியேட்டருக்குள் மிகுந்த சுத்தத்தைப் பேண வேண்டும் என்கிற சட்டம் மருத்துவத் துறையில் இருக்கிறது. சுத்தமின்மையால் கிருமிகள் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வெளியில் பிறப்பதை விட ஒரு குழந்தை ஆபரேஷன் தியேட்டரில் பிறக்கும்போது குழந்தைக்கும், தாய்க்கும் அதிக பாதுகாப்பு உண்டு. இதனால் சுத்தம் மிகவும் முக்கியம். ஆபரேஷன் தியேட்டருக்கான செலவு மற்றும் பாதுகாப்பு என்பது அதிகம். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் தேவைப்படும் கருவிகளை முழுக்க சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் முன் மருத்துவர்கள் தங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். கைகளின் மூலமாகவோ, சுவாசத்தின் மூலமாகவோ அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் எந்தத் தொற்றும் பரவி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியே இருக்கும் தொற்று ஆபரேஷன் தியேட்டருக்குள் வராமலும், அங்கே இருக்கும் தொற்று வெளியே செல்லாமலும் பாதுகாக்க வேண்டும்.