Skip to main content

"இன்னாது... எங்களுக்குன்னு ஒரு தினமா?!" - மகளிர் தினம் குறித்து உழைக்கும் பெண்கள் 

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

இன்று சர்வதேச மகளிர்  தினம். பெண்களின் பெருமை பற்றி பேசுவோம், போஸ்ட் போடுவோம், ட்வீட் பண்ணுவோம், அலுவலகத்தில் கொண்டாடுவோம், அம்மாவுக்குக் கால் பண்ணுவோம், இதை ஒரு சாக்கா வச்சு கேர்ள் ஃபிரண்டை சந்திப்போம். இப்படி எல்லா பெண்கள் தின கொண்டாட்டங்களும் படித்த, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் அப்படிப்பட்ட குடும்பங்களுக்குமாகத்தான் இருக்கிறது. பெண்ணியம், சமஉரிமை, மேல்-சாவனிஸம் (male chauvinism - ஆண் ஆதிக்கம்) இப்படி எதுவும் பேசத் தெரியாத, ஆனால் ஆண்களை விட அதிகமாக உழைத்து, தைரியமாக இருந்து பலரைக் காப்பாற்றும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை சென்று சந்தித்தேன். 

அவர்களிடம் மூன்று கேள்விகளை கேட்டேன். மார்ச் 8,  மகளிர் தினம் தெரியுமா?  பெண்ணாய் பிறந்ததாலேயே உங்களுக்கு கடினமாக இருப்பது எந்தெந்த விஷயங்கள்? ஒரு வேளை அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் ஆணாகப் பிறக்க ஆசையா,பெண்ணாகப் பிறக்க ஆசையா?
 

women's day


கோயம்பேட்டில் கூழ் விற்கும் சிங்காரம் அம்மா, "எனக்கா...அதெல்லாம்  தெரியாதே ஐயா... எனக்கு கஷ்டம்னு ஒன்னுமில்ல. புள்ளைங்க நல்லா பார்த்துக்குது... எனக்கு வீட்ல சும்மா இருக்க முடியல... இப்பதான் ஒரு மாசமா இந்தக் கடைய நடத்திட்டு வரேன். எப்படி ஐயா சொல்ல அடுத்த பிறவி இருக்கான்னு கடவுளுக்குதான் தெரியும். எனக்கெல்லாம் அடுத்த பிறவி ஆசையெல்லாம் இல்ல..." என்று மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதிலை கூறினார். பரவாயில்லை, எளியவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்ற பொது நம்பிக்கையை உடைத்தார் சிங்காரம் அம்மா.  

அடுத்து இவரைப் போலவே அனைவரும் சொன்னால் சிறப்பாக  இருக்கும் என்ற எண்ணத்தில் சென்றேன். அங்கு பூக்கடை வைத்திருக்கிறார் இந்திரா அக்கா. 'அக்கா உங்கள பேட்டி எடுக்கணும்' என்று சொன்னவுடன், 'எனக்கு ஒழுங்கா பேசத் தெரியாதேப்பா' என்று தயங்கினார். 'என்னக்கா, ஒரு வியாபாரிக்கு பேசத் தெரியாதா?' என்றேன். 'ஆமா...பெரிய்ய வியாபாரம்' என்று சலித்துக்கொண்டே பேசினார். 'நாளைக்கா மகளிர் தினம்? இந்த கட, வீடுன்னு இருக்குறதால எனக்கு எதுவும் தெரியாதுப்பா. எல்லாமே கஷ்டம்தான்... இங்க பாரு பூ ஒழுங்கா போனியாகல... குழந்தைகள படிக்க வைக்கணும்... இதுவே கஷ்டம்தான். அடுத்த பிறவியே வேணாம்" என்றவரை, 'ஒரு வேளை இருந்தா?' என்று கேட்டேன். "தம்பீ... வேணாம்ப்பா... ஆணாவும் பொறக்க வேணாம், பெண்ணாவும் பொறுக்க வேணாம். கடவுள் முடிவு பண்ணி ஏதாவது செய்வாரு" என்றார். 


 

singaaram amma women's day


 

இந்த ஜென்மத்தை சீக்கிரம் வாழ்ந்து முடித்தால் போதும் என்று தான் இந்திரா அக்கா விரும்புகிறார். சரி, கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் போய் பார்ப்போம் என்று நாங்கள் அங்கு சென்று மைக்கை எடுத்தவுடன், பின்னாலிருந்து ஒருவர், "தம்பி பேட்டியா... வா என்ன எடு... நான் நிரீய சொல்றேன்" என்றார். "நாங்க பெண்களைத்தான் எடுக்க வந்தோ"மென்று கூற, "இன்னாப்பா... ஆம்பிளைகளுக்கு நியாயமே கிடையாதா" என்று ஆவேசப்பட்டார். "சரி, நெக்ஸ்ட் டைம் என்னை எடு... இப்ப இந்தா, எங்க மதுரக்கார அக்காவ எடு"னு சொல்ல, கடலைக் கடை வைத்திருந்த அக்காவிடம் மைக்கை நீட்டியவுடன், "தம்பி வேணாம்யா, ஏதாச்சும் பிரச்சன வந்திடப்போகுது" என்று பயந்தார். "அக்கா...பிரச்சனை வருகிற அளவுக்கு நான் ஒர்த் இல்லை" என்று புரிய வைத்தேன். "என்னது... மார்ச் 8 மகளிர் தினமா? எங்களுக்குன்னு தினமெல்லாம் இருக்கா? எனக்குத் தெரியாதே... பொண்ணா பொறந்தா கஷ்டம்தான் ஐயா. மதுரையிலிருந்து வந்து இங்க பொழைக்கிறோம்ல. அடுத்த பிறவில ஆம்பளையாதான் பொறக்கணும்" என்று உறுதியாக சொன்னார். "அப்படி ஆண்கள் வாழ்க்கையில் எதை ஹெவியா லைக் பண்றீங்க" என்று கேட்டேன். "ம்ம்ம்... பொண்ணுங்க அஞ்சு மணிக்கு மேல வெளிய போக கூடாதுனு சொல்றாங்க. ஆம்பளைங்க பத்து மணிக்கு வந்தாலும் கேள்வி இல்ல. இப்படி எதுலயுமே ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லையே" என்றார். உண்மைதான், இன்றும் காதல் செய்யாவிட்டால் ஆசிட் அடிக்கிறோம், எரித்துக் கொள்கிறோம், பணிக்கு சென்று திரும்பிய பெண்ணை நகைக்காகக் கொலை செய்யத் துணிகிறோம். கொடுப்பது போல் கொடுத்து, அவர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.    

 

indhra womens day


 

கொஞ்சம் தள்ளி  பூ கட்டிக்கொண்டிருந்த முத்துலட்சுமி அக்கா கூப்பிட்டார். "தம்பி, என்னாண்ட கேள்வி சொல்லு, பதில் சொல்றேன்" என்றார். கேள்விகளை சொன்னவுடன், " மார்ச் 8 நல்லா தெரியுமே" என்று உற்சாகத்துடன் சொன்னார். "அப்பாடா...நம்ம அவுங்களுக்கு ஒரு தினம் கொண்டாடுறது ஒருத்தருக்காவது தெரியுது" என்று நம் குற்ற உணர்ச்சி கொஞ்சம் குறைந்தது. "தம்பி பொண்ணுனா தைரியமா இருக்கனும், எதையும் சமாளிக்கணும். எனக்கு கஷ்டம் இருந்தாலும் அதைப் பத்தி கவலைப்படமாட்டேன். நல்லா உழைக்கணும், யாரையும் எதிர்பார்க்காம" என்று எனர்ஜெட்டிக்காகப் பேசியவரிடம் அடுத்த பிறவி பற்றி கேட்டேன். "ஐயோ தம்பி பொண்ணாதான் பொறக்கணும். ஆணா பொறந்தா நாய் பிழைப்பு அது. வேணாம், பொண்ணா தைரியமா வாழனும்" என்று கம்பீரமாகச் சொன்னார். 

அடுத்து பேசிய இந்திரா அக்கா ஒரு பழ வியாபாரி. "ஆணா தான்ப்பா பொறக்கணும். அப்பதான் வீட்டுகார்ட்ட அடி வாங்க வேணாம், வீட்டு வேலை செய்ய வேண்டாம். வேலைக்கு போயிட்டு வந்து நிம்மதியா இருக்கலாம்" என்றார். உண்மைதான், இன்னும் பெரும்பாலான ஆண்கள் வேலைக்குச் செல்வதை மிகப்பெரிய சாதனையாக எண்ணிக்கொண்டு, மற்ற எல்லா பொறுப்புகளையும் சுமைகளையும் வீட்டு பெண்கள் மீது போடுகிறோம். இந்தப் பெண்களெல்லாம், ஆண்கள் செய்வதை விட கடினமான வேலைகளை, ஆண்கள் சந்திப்பதை விட கடினமான மனிதர்களை சந்திக்கிறார்கள். தங்கள் உழைப்பில் வாழ்கிறார்கள், ஆனாலும் ஏதோ ஒரு மாயக்கயிறு அவர்களின் சுதந்திரத்தை, சுயமரியாதையை ஒரு ஆணுடன் கட்டியிருக்கிறது.